வேதங்களே இத்திருமலை உருவமாக நிற்கின்றன,வேதங்கள் இறைவனது திருவடிக்கு கீழ் என்றும் இருக்க விரும்ப இறைவனும் வேதங்களை நோக்கி
குன்றென நின்மின் நுங்கள்
கொழுந்திடை அடைவோம் யாமே
எனக்கூறினார்.
அங்ஙனமே வேர்பாகம் இருக்கு வேதமும், நடுபாகம் யசுர் வேதமும்,முடிபாகம் சாம வேதமும், சிகரம் அதர்வண வேதமும் ஆக இம்மலை உருவாய் வேதங்கள் நிற்கின்றன.
அப்பர், சம்மந்தர், சுந்தர மூர்த்தி முதலிய மூவரும் இத்திருமலை மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிருந்தபடியே திருப்பதிகங்களை பாடினார்.அவர்கள் அங்ஙனம் இருந்து பாடிய இடம் நால்வர் கோயில் பேட்டை என இப்பொழுது வழங்கப்படுகிறது.
அங்கே நால்வர் கோயில் என்று ஓர் திருக்கோயில் உள்ளது. இத்திருமலை வேதம் ஆதலால் இறைவன் திருமேனியே இத்திருமலை என அஞ்சி இங்கு வழிபட்ட நந்திதேவர் மலை மீது ஏறாது வலம் வந்தனராம்
பெரிய புராணத்தில் அப்பர் சம்மந்தர் புராணத்தில் கழுக்குன்றின் பாங்கணைந்தார். திருமலையை வலங்கொண்டு என வருவன குறிக்கத்தக்கது.வேதமலை இது ஆதலால் இம்மலை வேதாசலம், வேதகிரி எனப்பெயர் பெறும்
இத்தலத்து பெருமான் சுந்தர மூர்த்திக்கு பொன் அளித்தார், மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் காட்டிய குரு வடிவை இங்கு மீண்டும் காட்டினார்.அப்பர் பெருமான் இம் மண்ணுலகை நீங்கு முன் கழுகுன்றத்து உச்சியாய் ;உன்னடிக்கே என இத்தலத்து பெருமானை நினைந்து அழைத்தனர்.
இத்தலத்து பெருமான் அடியார்க்கு நல்லார் என்பது அவர் நாச்சிமுத்து எங்கணும் கன்னிகைக்கு அளித்த பெறும் பேற்றால் அறியக் கிடைக்கின்றது. நாள்தோறும் திருமலைக்கு சென்று இறைவன் முன்னிலையில் திருக்கழுக்குன்ற மாலை போன்ற பாடல்களை பாடி பணிந்து வருவது வழக்கம் ஒருநாள் பெரு மழையால் திருமலைக்கு செல்ல முடியாமல் தன வீட்டிலிருந்த படியே எம்பெருமானே இம் முற்றத்திலே வந்து முன் நிற்கில் எளியேன் பாடி மகிழ்வேன் எனக்கூறி இறங்கி
பெற்றத்தி லேவருங் கோலமும் தாமுமென் பெண்மையுய்ய
முற்றத்தி லேவந்து முன்நிற்கி லோ முது வானவர்தம்
சுற்றத்தி லேகதிர்த் தோற்றத்தி லேதோல்லை நான்மறைநூல்
அற்றத்தி லே கழுக் குன்றத்தி லேகிற்கும் அற்புதனே
என்னும் பாடலை பாடி மனமுருக இறைவர் இவள் வீட்டு முற்றத்தில் காட்சி தர பேரானந்தத்துடன் வணங்கி எழுந்தாள். பின்னர் இறைவன் எழுந்தருளும் போது அவரை பிரிய மனமில்லாமல் இடப வாகனத்தின் திருவடியை இவள் பிடித்துக்கொண்டு கயிலைக்கு சென்றார்.
இது திருக்கழுக்குன்றத்தின் தல விருக்ஷம் கதலி வாழை ஆதலால் இத்தலம் கதலி வனம் என்பதும் அருணகிரி நாதர் காலத்தில் இத்தலத்தில் வேதஒலியும், தமிழ் வேதஒலியும் கடலொலி போல முழங்கின
"கடல்லொலியதான மறை தமிழ்க ளோது
கதலிவன மேவு பெருமானே"
தமிழ்வேத வெற்பிலமர்ந்த க்ருபாகராசிவ குமரவேனே
என வரும் அவர் திருவாக்கால் அறிய கிடைக்கின்றன.
கழுகுகள் இறைவனை வணங்குவதாலும் சங்கு தீர்த்தத்தில் சங்கு பிறப்பதாலும் இத்தலத்தின் பெருமையை பல நூற்றாண்டுகளாக இந்தியா முழுவதும் பரவியிருப்பதால் வடக்கில் இருப்போர் பக்ஷி தீர்த்தம் என்றே இத்தலத்தை இன்றும் நாடி தமது யாத்திரையில் இத் திருக்கழுக்குன்றத்திற்கு வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். இத்திருமலையின் பெருமை உணர்ந்தே சுந்தரமூர்த்தி நாயனார் “கழுகுன்றத்தை தொழுமின்” என்று முதல் ஐந்து பாடல்களில் அம்மலை தொழுவதே போதுமானது, பயன் தரும் என்பதை விளக்குகின்றார்.
திருவாரூர், திருபெருந்துறையில் ஞான நல்லுரை பெற்றபின் திருக்கழுகுன்றத்தை அடைந்து அங்கு இறைவன் திருக்கோலத்தை கண்டு ஒரு பதிகம் பாடினார். இத்தலத்தை வழிபட்ட பின் அவர் தில்லைக்கு சென்றார். அங்கு இறைவனால் ஏவப்பட்டு திருக்கோவையார் என்னும் அறிய நூலை பாடினார்.
விண்ணிறைந் தார் நிலம் விண்டவரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார் தில்லை யம்பலத் தார்க்கழுக் குன்றின்று
தண்ணு றுந் தாதிலர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவார் யார்கண்ண தோமன்ன நின் அருளே!
கழுக்குன்றில் நின்று என்னும் ற்றொடர் பொதுவாக கழுகுகள் சூழ்ந்த குன்றமொன்றை சுட்டி குறிஞ்சி நிலத்தை குறிக்கிறது என கொள்ளலாம் ஆனால் அச் செய்யுலில் மாணிக்கவாசக பெருமான் தாம் திருக்கழுகுன்றத்தில் கண்ட காட்சியை குறிப்பிடுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in