சண்டன்-பிரசண்டன்
சான்மலி என்னும் நாட்டில் வாழ்ந்த விருத்த சிரவன் என்கிற முனிவருக்கு சண்டன் பிரசண்டன் என்கிற இரு மைந்தர்கள் தோன்றினர். அவ்விருவரும் முன் செய்த தீவினைத் தொடர்பால் கழுகுப் பறவைகளின் உருவம் பொருந்தினார்கள் .அவர்களை விருத்த சிரவரன் “நீங்கள் பறவைகளுக்கு அரசாக விளங்கி இருங்கள்”என்று கூறினான். அவர்கள் “எங்களுக்கு அரசாட்சி செய்வதிலும் இல்லற வாழ்விலும் விருப்பம் இல்லை. ஞான முறையால், பரமசிவனை அடையத் தக்க முக்திப் பேற்றினைச் சொல்லுங்கள்”என்று வேண்டினார். விருத்த சிரவரன் மகிழ்ந்து, சிவபூசை முறையினைஉணர்த்தி “வேதகிரியில் சென்று பரமசிவத்தை வணங்குங்கள்”என்று அனுப்பினான். சண்டன், பிரசண்டனாகிய கழுகுருவமுடைய அவ்விருவரும் வேத வெற்பை அடைந்து நறுமணமுள்ள மலர்களாலும் நீரீனாலும் பரவுதல் செய்து பூசித்தனர். பரமசிவம் அவர்கள் முன் தோன்றி “உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்”என்றார். அவர்கள் “ஒப்பில்லாத முக்த்தியே அடியேன்களுக்கு வேண்டியது”என்கிறார்கள். சிவபெருமான் “இந்தக் கிரேதாயுகம் சென்ற பின் உங்களுக்கு முக்தியை அளிக்கிறோம். அதுகாறும் நம் பேரவையில் சிவகணங்களுக்குத் தலைவராய் இருங்கள்”என்றருள் பாலித்தார். அவர்களும் அவ்வாறிருந்து முக்தி எய்தினார்கள்
திரேதாயுகத்தில் ஒளி பொருந்திய திங்களைப் போன்ற வெண்மைநிறம் உடைய கழுகுகளுக்கு இறைவர்களாகிய சம்பாதி, சடாயு என்னும் கழுகுகள் மிகுந்த பலத்துடன் விளங்கி இருந்தனர். அவர்கள் தங்களுக்குள், பலத்தால் நான் பெரியவன் நான் பெரியவனென்று பகைத்தனர். மூத்தசம் பாதியும் பலம் பொருந்திய சடாயு என்ற தம்பியும் “கதிரவனுக்கு மேல் போய் திரும்புவோம். திரும்பும் போது பார்க்கின்றவர்களுக்கு நம் உடல் பலம் தெரியும்”என்று சபதம் செய்து முனிவர்கள் கூட்டத்தைச் சான்று வைத்து மேருகிரியினின்று எண்ணில் காலம்வானை யொட்டி பறக்கலாயினர். அளவிலாக்காதங்கள் இவர்கள் பறத்தலைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் மயங்கி ஓடினார்கள். அவர்களுடைய சிறகுக் காற்றினால் வித்தியாதரர்கள் சித்தர்கள் கின்னரர்கள் என்னும் இவர்கள் செல்கின்ற அளவற்ற தேர்களும் விமானங்களும் வழிதப்பி ஓடின. விண்மீன்களும் கதிர் மண்டலத்துப் பச்சைக் குதிரைகளும் பறந்து செல்கின்றவர்களைக் கண்டு மனங்கலங்கிக் கண்களை மூடின.
இவர்கள் இவ்வாறு கதிரவன் மண்டலம் நாடி வருவதைக் கண்ட கதிரவன் மண்டலத்திலிருக்கும் கணங்கள் பயந்து ஓடி கதிரவனிடம் கூறினர். இவ்வாறு இவர்கள் கதிரவன் மண்டலத்தில் புகுந்த அளவில் அங்கிருந்த வாய்மையில் சிறந்த அஞ்சனன் என்னும் முனிவன் அக்கழுகுகளை நோக்கி, “நீங்கள் ஆயிரங் கதிர்களையுடைய கதிரவன் கோயிலை அணுகும் படி செல்கிறீர்கள். ஆதலால் நீங்கள் தீயை எடுத்து ஆடையில் அடக்கிக் கொள்ளவும் எண்ணம் கொள்வீர்கள். தம்மில் தகுதியுடையவர்களுடைய வெம்மையைக் கண்டஞ்சாதவர்கள் இப்பிறப்பில் மட்டும் அன்றி மறுபிறப்பிலும் துன்புறுவார்கள். நெறியில் செல்லுங் கதிரவனைத் தடுத்த தன்மையால், உங்கள் தருக்கை உங்கள் தீமையே அழித்துவிடும். கதிரவனுடைய நெருப்பினால் நீங்கள் இருவரும் மனம் வெந்து மேனிகரிந்து வெந்து ஒன்றாய் ‘விழக்கடவீர்’என்று சாபம் மொழிந்தார்.
முன் சென்றவனாகிய சம்பாதி சிறகு வெந்தனன். அது வெந்த பின் சிறகு எல்லாம் சிந்திப் போய் பூமியில் விழுந்தான். பின் வந்த தம்பியாகிய சடாயு ஒளி பொருந்திய சிறகு வேகாதவனாய்ப் பொலிவுள்ள உடல் பொரிந்து துன்பத்துடன் அழுதான். இவ்வாறு விழுந்த இருவரும் வருந்தி வானில் இருக்கும் அஞ்சன முனிவனை அழைத்து “வெந்த இக்குறை நீங்கும் முறைமையை அய்யனே! சொல்லும்”என்று வேண்டினர். பெரிய வேதாசலத்தில் வீற்றிருக்கும் பரமசிவத்தைப் பூசித்தால் இந்தக்குறை அறிவில்லாதவர்களாகிய உங்களை விட்டோடும்”என்று அவர்களை அம்முனிவர் அனுப்பினார்
அவ்வஞ்சன முனிவர் கூறிய வண்ணம் சம்பாதி, சடாயு வாகிய இருவரும் வேதகிரியினிடத்திற் சென்று அங்கு இருக்கும் தடாக நீராலும் மலர்களாலும் இறைவனைப் பூசித்தனர். அந்தத் திரேதாயுகத்தில் அவ்விருவருக்கும் பரமசிவம் தரிசனம் கொடுத்தருளி அவர்கள் உடலிற்பொருந்திய வெப்பத்தைத் தணித் தருளிப் பழையபலம்உண்டாகக்செய்து, அதன் பின்புசம்பாதியை நோக்கி “சீதையைத் தேடி இராமன் விடுக்கும் தூதர்களால் உனக்குச் சிறகு உண்டாகும்”என்றருள் செய்தார். இத்திருவருளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சென்றார்கள்.
சம்புகுத்தன்-மாருத்தன்
துவாபரயுகத்தில், பார்வதி தேவியாருக்கும் ஒரு பாகம் தந்தருளிய பரமசிவம் வீற்றிருந்தருளுகின்ற உருத்திரகோடியில் சம்புகுத்தன், மாருத்தன் எனும் பெயர்ளையுடைய இருவர் நெடுங்காலம் தவஞ் செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு உடலுக்கு ஓருயிர் போல் இருந்த இவர்களில் மூத்தவன் “சிவமேபெரிது”என்றனன். அது கேட்ட இளையவன் “சக்தியே பெரிது”என்று கூறினான். இதனால், இவர்களுக்குள் ஒழியாத பகையுண்டாகியது. இதனை எந்த முனிவர்களிடம் சொன்னாலும் அவர்கள் எம் போலியர்களாதலின் சொல்வதரிது என்று கோபம் தணியாமல் இதற்குப் பரமசிவமே சான்றாகும் என்று முனிவர் இருவரும் கூடிச்சென்று பரமசிவத்தின் முன்பணிந்து நின்று விண்ணப்பஞ்செய்ய சிவபெருமான் “சிவம், சக்தி என்கிற இருமொழியும் ஒரு மொழியோடொக்கும். ஆதலின் உங்கள் கோபத்தை விடுங்கள்”என்று திருவாய்மலர் தருளினார் சிவபெருமான் கூறியும் இருவரும் ஒருவரோடொருவர் பொறுமை இழந்து சக்தியே பெரியதென்றும் சிவமேபெரியதென்றும் வாதிட்டனர். அவ்விருவரின் நிலையைக் கண்டு பரமசிவமும் பராசக்தியும் ஒருவர் முகத்தை யொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். ஒளியும் மாணிக்கமும், கடலும், அலையும், அமுதமும் சுவையும், எள்ளும் எண்ணெயும், பொன்னும் அணியும் போல் பிரியாமலிருக்கிற தங்களைப் பிரித்துரைத்த அவர்களை சக்தி பெரியதென்றவனைச் சக்தியும், சிவம் பெரியதென்றவனைச் சிவமும் நோக்கி, “நீங்கள் இருவரும் கழுகுகளாய்ச் சுழலக் கடவீர்கள்”என்று சபித்தார்கள். அவர்கள் இருவரும் அப்பொழுதே கழுகுகளாகி நடுநடுங்கி “அய்யனே! எங்கள் குற்றங்களைப் பொறுத்தருளி, இக்கழுகுருவம் நீங்கும் இடமும் காலமும் கட்டளையிட்டருள வேண்டும்”என்ற விண்ணப்பம் செய்ய “இந்த யுகம் நீங்கும் போது அந்த வரம் உங்களுக்குத் தந்தருளுகிறோம். அப்படித் தருகிற வரைக்கும் தவத்தையும் பூசையையும் நீங்கள் இவ்வேத தலத்தில் செய்யுங்கள்”என்று கட்டளையிட்டருளினர். அன்புடன் செய்து பழையஉருவம் பெற்றுய்ந்தார்கள்.
பூஷா-விருத்தா
கலியுகத் தோற்ற முதல் வேத வெற்பினிடத்து பூஷா, விருத்தா என்கிற இருமுனிவர் நெடுங்காலம் தவம் செய்தார்கள். இளையவனும் மூத்தவனும் அரிய தவஞ்செய்த அளவில் சிவபெருமான் திருவுளம் மகிழ்ந்து, “உங்களுக்கு நம்முடைய திருமேனியருள் செய்தோம். ஒருகற்பகாலம் அந்தப் பதவியில் இருங்கள், அவ்வாறிருந்தால் பிறகு முத்தியையும் அளிக்கிறோம்”என்றருளிச் செய்தார். அவர்கள் “அதுவரைக்கும் ஐம்பொறிகள் நன்மார்க்கத்தில் இருப்பதை யார்கண்டார்கள்? நிருமல மூர்த்தியே! இப்போதே எங்களுக்கு முத்திப் பேற்றினை அளித்தருள வேண்டும்”என்கிறார்கள். சிவபெருமான் “நம்முடைய திருமேனி போல் உருவந்தரித் திருத்தலையும் விரும்பாதவர்களாய், நம்முடைய திருவருளால் உரைத்த ஏவலையும் ஏற்றுக் கொள்ளாது நீக்கிவிட்டீர்கள். ஆதலால், நீங்கள் கழுகுருவாகப் பிறந்து கடல் சூழ்ந்த உலகில் திரியுங்கள்”என்று சபித்தார். அந்த இருவரும் பயந்து ‘எங்கள் குறையைப் பொறுத்தருளும்’எனப் பணிந்து, ‘கழுகுருவமாகப் பிறந்தாலும் உம்முடைய திருவடித் தொண்டில் மயக்கம் இல்லாமையும் இந்தச் சாபத்தின் முடிவும் கட்டளையிட்டருள வேண்டும்’என்று விண்ணப்பித்தனர். சிவபெருமான் “நீங்கள் காசிப முனிவரிடத்தில் கழுகுகளாய்ப் பிறந்து, உங்களுடைய மூக்குளால் இந்த மலையினைக் கீறினால் அதில் ஆகாயகங்கை அலைவீச உண்டாகும். அந்தத் தீர்த்தத்தில் முழுகி விருப்பத்துடன் எம்மைப்பூசியுங்கள். அவ்வாறு பூசித்துக் கலியுக முடிவில் முக்தி அடையுங்கள்”என்று திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு அருளியவுடன் அவ்விருவரும் கைகுவித்துத் தொழுது, காசிப முனிவரிடத்தில் போய் சம்பு – ஆதி என்ற பெயருடன் கழுகுகளாய் பிறந்து, பரமசிவம் கட்டளையிட்ட படி வேதகிரியில் தம் முக்குகளால் கீறினர். தடாக முண்டாகியது. அதில் மூழ்கி மலையை வலம் வந்து இறைவனைப் பூசித்துக் கொண்டிருக்களாயினர். கழுகு முனிவர்கள் முறையே பூசித்துக் கொண்டு வருவதால் இப்பதிக்கு திருக்கழுக்குன்றம் எனும் பெயருண்டாகியது. கழுக்குன்றம், கங்காசலம் எனும் பெயர்கள் உண்டாயின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in