ஸ்ரீ அருள்மிகு வேதகிரிஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி அம்மன்
- திருக்கோவில் வரலாறு (பார்வை)
திருக்கழுக்குன்றம் (பட்சித் தீர்த்தம்)
திருக்கோவில் வரலாறு
கி.பி. 7-ஆம் நூற்றாண்டு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய ஆலயங்களில் மிகவும் சிறப்புற்றதாகவும், ‘தட்சிண கைலாசம்” எனவும் வழங்கப்படும் கலைசிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்று ‘திருக்கழுக்குன்றம்” எனும் ‘சிவஸ்தலம்”. ‘தட்சிண கைலாசம்” என்றால் ‘தெற்கிலுள்ள வானுலகம்” என்பது பொருள். கல்வெட்டுக்களில் ‘உலகளந்த சோழபுரம்” எனவும் கூறப்படுகிறது. இக்கோவில் பட்சித்தீர்த்தம், இந்திரபுரி, கழுகாசலம், பிரம்மபுரி, வேதநாராயணபுரம், தினகரபுரி, ருத்ரகோட்டீஸ்வரம், நந்திபுரி என பல பெயர்களாலும் அழைக்கப்பட்டது. இது கன்னிராசிக்குரிய ஸ்தலமாகும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்தல விருட்சம் வாழைமரம்.
திருக்கழுக்குன்றம் மலையின் உயரம் சுமார் 500 அடி. மலைக்கோவிலை அடைய 562 படிகள் உள்ளன. அழகிய வளமுள்ள சஞ்சீவிக் காற்றைத் தரும்படியான மலையாக அமையப் பெற்றுள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்த ஸ்தலம் ஆரோக்கிய ஸ்தலமாகக் கருதப்பட்டு வருகிறது. இம்மலையின் விஸ்தீரணம் 264 ஏக்கர். கிரி பிரதட்சணம் மட்டும் சுமார் 2 ½ மைல். ரிக், யஜுர், சாம, அதர்வண என நான்கு வேதமலைகள் உள்ளன. அதில் அதர்வண வேதமலை உச்சியில் சிவப்பெருமான் திருக்கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் என்பது ஐதீகம். மலைக் கோவிலில் சிவபெருமான் வாழைப்பூப் போல் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். அவ்வுருவம் சிதைவுறா வண்ணம் சிவலிங்கப் பெருமானுக்கு வெள்ளிக் கவசம் தருத்திருக்கிறார்கள். ஸ்வாமி ‘ஸ்ரீ வேதகிரிஸ்வரர்” என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். அம்பாள் சொக்கநாயகி.
இந்திரன் வழிபட்ட ஸ்தலம் ஆதலால் ‘இந்திரபுரி” எனவும் மற்றும் பிரம்மபுரி, வேதநாராயணபுரம், கழுகாசலம் எனவும் பலப் பெயர்களால் வழங்கப்படுகிறது. வேதமே மலையாக அமைந்துள்ளதால் வேதமலை என்றும், மலையை மிதித்தல் பாவம் எனக் கருதி நாயன்மார்கள் (அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்) நால்வரும் மலையில் அடிவாரத்தில் இருந்தபடியே இறைவனை வணங்கி பாடிச் சென்றதாக கூறுவர். அவர்கள் நின்று பாடிச் சென்ற இடம் ‘நால்வர் கோவில்” என வழங்கப்படுகிறது. அங்கு அவர்களுக்கு கோவில் எடுக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் தாழகோவிலில் பல்லவ, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பழமை வாய்ந்த பக்தவசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் பக்தவசலேஸ்வரர் லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார். கோவிலைச் சுற்றி நான்கு ராஜ கோபுரங்கள் உள்ளன. உள்ளே சுவாமிக்கு ரிஷி கோபுரம் உள்ளது. சுவாமி மற்றும் அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கென ஐந்து தேர்கள் உள்ளன. பக்தவசலேஸ்வரர் தேர் 56.5 அடி உயரமுடையதாகும். இதன் வெளி மண்டபத்தில் ஏழு அடி உயர ‘ஸ்ரீ அகோர வீரபத்திரன்” கம்பீரமாக காட்சியளிக்கிறார். கோவிலின் வடமேற்கு மூலையில் அம்பாள் ‘ஸ்ரீ திரிபுர சுந்தரி” காட்சி கொடுக்கிறார். கேட்பவர்க்கு கேட்கும் பரம் அளிக்கும் அன்னையாக மிகவும் சக்தி வாய்ந்தவளாக திகழ்கிறாள். தென்மேற்கே ‘வண்டு வன விநாயகர்” ஆலயமும், அதன் அருகே ஆறுமுகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். மற்றும் மாணிக்கவாசகர், கணநாதர், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘சித்தாத்ரி கணபதி” ஆலயமம் உள்ளன.
வடகிழக்கு கரையில் பெரிய நந்தி விக்ரகம் திருமலையாண்டவனை காணும் முகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் மலைக் கோவிலில் நந்தி விக்ரகம் இல்லை என்பது குறிப்பு. நந்தி தேவர் தவம் செய்து பேறு பெற்ற இடம் இதனால் ‘நந்திபுரி” எனவும் இத்தலத்திற்கு பெயர் உண்டு. இந்த ஸ்தலத்தில் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட கோவில் ‘ருத்ர கோடிஸ்வரம்” சங்கு தீர்த்தத்திற்கு தென்கிழக்கில் இக்கோவில் அமைந்துள்ளது. இம்மலையில் கோடி ருத்திரர்கள் தவம் செய்து வழிபட்ட ஸ்தலம், அவர்கள் ஸ்தாபித்த லிங்கத்திற்கு ருத்ர கோடிஸ்வரர் என்றும், அம்பாள் அபிராமி நாயகி என்றும் வணங்கி வருகின்றனர். ஏற்கனவே இத்தலத்தில் விஷ்ணு ஆலயமொன்று இருந்ததாக கூறப்படுகிறது. விஷ்ணுவின் சில விக்கிரங்கள் இங்கு காணப்படுவதே இதற்கு சாட்சியாகும். இதனால் இத்தலம் வேதநாராயணபுரம் எனவும் விளங்குகிறது. சமய பேதமின்றி வைணவர்களும் ஸ்ரீ வேதகிரீஸ்வரரை வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
மார்கண்டேய சங்குதீர்த்தம்
மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் ஆசனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அபர்கள் முன் தோன்றிய சிவபெருமான் உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா? நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா? எனக் கேட்டார். இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டனர் அந்த தம்பதியர். எனவே மார்கண்டேயர் 16வயது ஆயுளோடு பிறந்து சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு 16வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமதூதர்கள் வந்தனர். அப்போது மார்கண்டேயர் சிவனை நினைத்து கடும் பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் அவரது உயிரை கவர முடியாமல் எமதூதர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து எமனே நேரடியாக அங்கு வந்தான். எமனைக்கண்டதும் மார்கண்டேயர் சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.
ஆனால் எமன், பாசக்கயிறை மார்கண்டேயர் மேல் வீசினான். அந்த கயிறு மார்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக்கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான். இதையடுத்து மார்கண்டேயர் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்று தான் திருக்கழுக்குன்றம். வேதமலை ஈசனை வழிபட்டுவிட்டு சங்குதீர்த்தகுளத்தில் நீராடிய மார்கண்டேய முனிவர் இத்தீர்த்தத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து இறைவனை பூஜிக்கும் போது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லையே என நினைத்தவுடன் ஓங்கார ஒலியோடு வெண்சங்கு (வலம் புரி) தோன்றியதாம். அதனை பாத்திரமாகக் கொண்டு பூஜைகள் செய்தாராம். மார்க்கண்டேய முனிவர் சிவன் அருளால் என்றும் பதினாறு வயதுடையவராக இருக்கும் தகுதி பெற்றவர். இன்றும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘சங்கு” தோன்றுவதைக் காணலாம். அவ்வாறு கடந்த 1932-ஆம் ஆண்டு முதல் சங்கும், இரண்டாவது சங்கு 1952-ஆம் ஆண்டும் முறையே 1964, 1976, 1987, 1999 (ஆடிப்பூரம் அன்று) என 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்குகள் தோன்றியுள்ளன. சமீபத்தில் கடந்த 01.09.2011 அன்று விநாயகர் சதுர்த்தியன்று காலை 10.00 மணி அளவில் சங்கு தோன்றியது. இவையனைத்தும் கோவில் கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சங்குகள் அனைத்துடன் 1008 இடம்புரி சங்குகளையும் சேர்த்து கார்த்திகை மாதம் கடைசி சோமவாரம் அன்று மலை மீது 1008 சங்காபிஷேகம் நடைபெறும். பொதுவாக சிவபெருமான் அபிஷேக பிரியர். அதுவும் சங்காபிஷேகம் மிகவும் சிவபெருமானுக்கு உகந்ததாகும். சங்குகள் கடலில் தோன்றுவது இயற்கை. ஆனால் உலகிலேயே குளத்தில் சங்குப் பிறப்பது இக்கோவிலுக்குள்ள தனிச்சிறப்பாகும்.
கழுகு முனிவர்கள்
ஒரு சமயம் பிரம்மபுத்திரர்கள் எண்மர் (8 பேர்) சாரூப பதவிக்காக சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். சிவபெருமான் அவர்கள் முன் காட்சியளித்த போது, சாயுஜ்ஜிய பதவியை அருள வேண்டினர். ஒன்றை நினைத்து தவம் செய்து பின் மற்றொன்றை விரும்பிக் கேட்டதால், சிவத்துரோகம் எனக் கருதி சிவபெருமான் அவர்களை கழுகுகளாகப் பிறக்கும்படி சபித்தார். அவர்கள் மன்னிக்க வேண்டவே, சாப விமோசனமாக நீங்கள் எண்மரும் யுகத்திற்கு இரண்டு கழுகுகள் வீதம் பிறந்து, யாம் வீற்றிருக்கும் வேதகிரியை பூஜித்து யுக முடிவில் சாப விமோசனமும், சாயுஜ்ய பதவியையும் பெறுவீர்களாக! என அருளினார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.
திரேதாயுக தொடக்கத்திலேயே கழுகு முனிவர்கள் பூஜித்ததால் இக்கோவில் மிகப் பழமை வாய்ந்தது என்பதை எளிதில் அறியலாம். சென்ற மூன்று யுகத்தில் அறுவர் அதாவது சண்டன், பிரசண்டன், சம்பாதி, ஜடாயு, சம்புகுந்தன், மாகுத்தன் இவர்கள் கழுகுகளாக பிறந்து பூஜைகள் செய்து பேறு பெற்றனர். இக்கலியுகத்தில் மற்ற இருவரான பூஷா, விதாதா என்பவர்கள் கழுகுகளாக பிறந்து பூஜித்து வருகிறார்கள். இக்கழுகுகள் நாள்தோறும் காலையில் 12.00 மணிக்கு மலைக்கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கி தேசிகர் தரும் சர்க்கரைப் பொங்கலை உண்டு கோவில் சிகரத்தை மூன்று முறை வலம் வந்து செல்வதை இன்றும் காணலாம். இப்பட்சிகள் அதிகாலையில் காசியில் - வாரணாசியில் கங்கா ஸ்நானம் செய்துவிட்டு, நடுப்பகலில் திருக்கழுக்குன்றம் வந்து இறைவனை வணங்கி உணவு உண்டு, மாலையில் ராமேஸ்வரம் சென்று வழிபட்டு, இரவு சிதம்பரம் தில்லையை அடைந்து உறங்குகின்றன, மீண்டும் அதிகாலை காசி சென்று வழக்கம் போல் திருக்கழுக்குன்றம் வருகின்றன என்று கர்ண பரம்பரையாக இங்குள்ள மக்களால் சொல்லப்படுகிறது. இதனை ஆங்கிலேயர்கள் சோதனை செய்து உண்மை என ஒத்துக் கொண்டதோடு இறைவனின் மகிமையை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீராமபிரான், பிராட்டி, லஷ்மணன் சகிதம் இங்கு வந்து சம்பாதி, ஜடாயு என்ற கழுகு பறவைகளை கண்டு பேசியதாக ‘ஆனந்த இராமாயணன்” (கிரந்தம்) யாத்திரா காண்டத்தில் கூறியிருப்பது இத்தலத்தின் பெருமையைக் குறிக்கும்.
கோவிலின் புண்ணிய தீர்த்தங்கள்
மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக தொடங்கினார்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் என்ற தாயுமானவர் வாக்கிற்கும், ‘சென்றாடும் தீர்த்தங்கள் ஆனான் கண்டாய்” என்ற ‘அப்பர்” வாக்கிற்கும் ஏற்ப ஆண்டவன் ‘ஸ்தலமாக”, ‘தீர்த்தமாக”, ‘மூர்த்தியாக” இங்கு வீற்றிருக்கிறான். மலையைச் சுற்றி பன்னிரெண்டு தீர்த்தங்கள் உள்ளன. அவை இந்திரதீர்த்தம், சம்பு தீர்த்தம், ருத்ரதீர்த்தம், வசிஷ்டதீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கவுஷிகதீர்த்தம், நந்தி தீர்த்தம், வருணதீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம் என்பனவாகும். அத்தகைய தீர்த்தங்களில் முக்கியமானது ‘பட்சி தீர்த்தம்” எனப்படும் ‘சங்கு தீர்த்தம்”.
சங்கு அபிஷேகம்
மேலும் இச்சங்குகள் அனைத்துடன் 1008 இடம்புரி சங்குகளையும் சேர்த்து கார்த்திகை மாதம் கடைசி சோமவாரம் அன்று மலை மீது 1008 சங்காபிஷேகம் நடைபெறும். பொதுவாக சிவபெருமான் அபிஷேக பிரியர். அதுவும் சங்காபிஷேகம் மிகவும் சிவபெருமானுக்கு உகந்ததாகும். சங்குகள் கடலில் தோன்றுவது இயற்கை. ஆனால் உலகிலேயே குளத்தில் சங்குப் பிறப்பது இக்கோவிலுக்குள்ள தனிச்சிறப்பாகும்.
இந்திரன் வழிபட்ட ஸ்தலம்
இந்திரன் பன்னிரெண்டு ஆண்டிற்கு ஒருமுறை இங்கு வந்து நீராடி இறைவனை வழிபடுவதாக ஸ்தல புராணம் கூறுகிறது. மேலும் இந்திரன் பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை ‘இடி அபிஷேகம்” எனும் பூஜை செய்வதாகவும் இந்த இடி, மலை கோபுரத்தின் மீது விழுந்து திருமலையாண்டவனை மூன்று முறை பிரதட்சணம் செய்து பூமியில் இறங்கி விடுகிறது. இதனால் கோவிலுக்கு எந்த கெடுதியும் ஏற்படவில்லை. 1889-ஆம் ஆண்டிலும், 1901-ஆம் ஆண்டிலும் இவ்வபிஷேகம் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இதுகாறும் நடைபெறவில்லை. கலியின் மகிமைதான் இதற்கு காரணம் என்கிறார்கள். இந்திரன் வழிபட்ட ஸ்தலம் ஆதலால் ‘இந்திரபுரி” எனவும் மற்றும் பிரம்மபுரி, வேதநாராயணபுரம், கழுகாசலம் எனவும் பலப் பெயர்களால் வழங்கப்படுகிறது.
புஷ்கர மேளா இலட்சதீபம்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்த புஷ்கர மேளாவுடன் இணைந்து ‘லட்ச தீப பெருவிழா” நடைபெறுகிறது. 12 வருடத்திற்கு ஒருமுறை குருவின் கன்னிராசி சஞ்சாரத்தைப் பொறுத்து லட்ச தீப விழா நடக்கும். அன்று லட்ச தீபங்கள் கோவில் மற்றும் வீடுகளில் ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது.
திருவிழாக்கள்
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 11 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். அதுபோல் ஆடிமாதம் 10நாட்கள் ஆடிப்பூர உற்சவமும் புரட்டாசி மாதம் அமாவாசை மறுநாள் துவங்கி 9நாட்கள் நவராத்திரி உற்சவமும், மாணிக்கவாசகர் திருவிழா, திருஞானசம்பந்தர் திருவிழா, விடையாற்றி உற்சவம் எனத்; திருவிழாவும் சித்ரா பௌர்ணமி, மகாசிவராத்திரி ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நதிகளின் நீராடல்
இத்திருத்தலத்தில் சங்கு தீர்த்த புஷ்கரமேளா நடைபெறுவதற்கு இன்னொரு சுவையான வரலாறும் கூறப்படுகிறது.
அனகை அம்பை, இந்திரபுத்ரா, ருத்ரா, கங்கை, காளிந்தி, கவுதனை, கம்பை, காவேரி, சிங்கை சிந்து சோமம், சோவதி, தாமிரபரணி, துங்கபத்திரா, தென்குமரி, தேவிகை, நர்மதை, நந்தினி, பம்பை, பாலிபிராமி, பினாகி, மலப்பிரதாரினி, மந்தாத்ரி, மணிமுத்து, யமுனை, வேத்தராவதி, கைதாரிணி, வைகை ஆதலிய நதிகளுக்குள், யார் உயர்ந்தவர்கள் என்ற சண்டை உருவானது. ஒவ்வொருவரும் தாங்களே உயர்ந்தவர்கள் என்று இறுமாப்பு கொண்டனர்.
அனைத்து நதிகளும் இத்திலத்தில் உள்ள சங்குதீர்த்தத்தில் நீராடி, வேதகிரீஸ்வரரை வழிபட முடிவு செய்தனர். அதன்படி இங்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டனர். அப்போது இறைவன் அவர்கள் முன்பாக தோன்றி, இத்தலத்தில் தேங்கி நிற்கும் சங்குதீர்த்தம், இறைவனான எனக்கு அபிஷேகம் செய்ய கங்கை உற்பத்தி செய்கிறது. அதைக்காட்டிலும் நீண்ட நெடிய நதிகளாகிய நீங்கள் உயர்ந்தவர்களா என்று முடிவு செய்யுங்கள் எனக்கூறி மறைந்தார். நதிகள் அனைத்தும் வெட்கி தலைகுனிந்தன. பின்னர் தாங்கள் இறுமாப்பால் செய்த பாவங்கள் விலக இந்த தீர்த்தகுளத்தில் நீராடினர். அந்த தினம் குருபகவான் கன்னிராசியில் புகுந்த நாளாகும். எனவே இந்த நாளில் அனைத்துநதிகளும் இத்தலத்திலுள்ள சங்குதீர்த்தத்தில் நீராடுவதாக ஐதீகம்.