பக்கங்கள்

பக்கங்கள்

செவ்வாய், 21 டிசம்பர், 2021

Arulmigu Vedhagiriswarar Temple, Thirukalukundram

திருச்சிற்றம்பலம்

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி  
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே -எல்லை  
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்  
திருவாசகம் என்னும் தேன்.

#எட்டாம்திருமுறை -#திருவாசகம் -#திருக்கழுக்குன்றம் -#ஸ்ரீமத்மாணிக்கவாசகர் -#திருக்கழுக்குன்றபதிகம்
#30

திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபிரான் ஞானகுருவாக எழுந்தருளி திருவாதவூரருக்கு சிவஞானங் காட்டி திருவடி தீட்சை வழங்கிய பின் அருளிச்செய்த திருவாசகம் 

சிவபெருமானே திருவாதவூராரை மாணிக்கவாசகர் என திருநாமம் சூட்டி பின் மாணிக்கவாசகர் சிவபெருமானின் அநாதி பெருமையை சொல்ல சொல்ல அந்த இறைவனே தம் திருமேனி திருக்கரத்தினால் எழுதப்பட்ட திருவாசகம்.

இத்தலத்தில் அடிகட்கு இறைவன் முன்னர்த் திருப்பெருந்துறைக்கண் வந்து ஆட்கொண்ட கோலத்தையே காட்டினான் என்பது இதன்கண் இனிது விளங்கிக் கிடத்தலானும், புராணமும் அங்ஙனமே கூறுதலானும் இதற்கு, `குரு தரிசனம்` என்றே குறிப்புரைத்தனர் முன்னோர். ஏழு திருப்பாட்டுக்களையே உடையதாயிருத்தலின், ஏனைய பாட்டுக்கள் கிடைத்தில என்க.

குரு தரிசனம்
அஃதாவது, அடிகள், இறைவன் தமக்கு அருள் புரிந்த ஞானாசிரியன் கோலத்தைக் கண்ட காட்சியின் சிறப்பைக் கூறியது.

#திருக்கழுக்குன்றப்பதிகம்

#பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (01)
- - - - -
பொழிப்புரை :
பெருந்துறைப் பெருமானே! உன் திருப் பெயர்களைப் புகழ்ந்து பேசுவோர்க்கு ஒப்பற்ற ஆனந்தமே! என் இருவினை ஒத்தபிறகு, என் பிறவி வித்து இனிமேல் முளையாதபடி, நீ திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#பிட்டு நேர்பட மண்சு மந்த
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (02)
- - - - -
பொழிப்புரை :
பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறைப் பெருமானே! உன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை அடைந்திலேன்; ஆயினும், நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளும் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
மலங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (03)
- - - - -
பொழிப்புரை :
என் கண்ணீர் துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! நான் உன்னை விட்டு நீங்கினேன்; மேல் விளையும் காரியத்தை அறிந்திலேன்; உன் திருவடி இரண்டையும் வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக் கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#பூணொ ணாததொ ரன்பு பூண்டு
பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
நடுக்கட லுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே. (04)
- - - - -
பொழிப்புரை :
உன் அன்பர் உன்னிடத்தில் பேரன்பு பூண்டு வணங்கக் கண்டு, நான் மிக்க நாணம் அடைந்து, துன்பக் கடலில் அழுந்தி, திருப்பெருந்துறையாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தலும், நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, காணமுடியாத உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#கோல மேனிவ ராக மேகுண
மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
நச்சி நச்சிட வந்திடும்
கால மேஉனை ஓதநீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (05)
- - - -
பொழிப்புரை :
அழகிய திருவுருவம் உடையவனே! திருப்பெருந் துறைக் கொண்டலே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் மனத் தில் வைக்கப் பட்டிருக்கிற சிகாமணியே! உலகமே சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#பேதம் இல்ல தொர்கற் பளித்த
பெருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (06)
- - - - -
பொழிப்புரை :
வேறுபடுதல் இல்லாத ஒப்பற்ற கல்வியாகிய ஞானத்தை அருள்செய்த திருப்பெருந்துறை இன்பப் பெருக்கே! பல தீமைகள் பேசும்படி என்னை அயலார் முன்னே நீ என்ன காரியம் செய்து வைத்தாய்?. முடிவற்றனவும், தீங்கற்றனவுமாகின உன் திருவடிகளே எனக்குப் புகலிடம் எனக் கருதி ஆசையோடு உன்னைப் புகழும் வண்ணம் நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#இயக்கி மார்அறு பத்து நால்வரை
எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்ம லப்பழ
வல்வி னைக்குள் அழுந்தவும்
துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்
தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்மு னேவந்து
காட்டினாய் கழுக் குன்றிலே. (07)
- - - - -
பொழிப்புரை :
இயக்கிமார் அறுபத்து நால்வரைத் தன் ஞானோபதேசத்தால் எண்குணமும் அடையச் செய்த ஈசனே! மயக்கத்துக்கு ஏதுவாகிய மும்மல சம்பந்தமாகிய வல்வினைக் கடலில் அடியேன் அழுந்தி நிற்கவும் என் தளர்ச்சியை நீக்கி, என்னை ஆண்டருளி, உன் திருவடிகளைத் தந்து அடியார்களுக்கு எதிரில் திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -
#ஸ்ரீமத்மாணிக்கவாசகசுவாமிகள்

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

www.thirukalukundram.in